Tuesday, 3 July 2012

கல்யாணம்: ஜபங்கள், ப்ரவிச்ய ஹோமம், சேஸஹோமம், ஸமாவேஸனம்-விவாஹ முடிவு வரை

அடுத்து மணமகன் மணமகளை தன் இல்லததிற்கு அழைத்துச் செல்ல மாட்டு வண்டி கட்ட மந்த்ரம்:
ஸத்யேநோத்தபிதா பூமி: :- பூமி ஸத்யத்திற்குக் கட்டுப்பட்டு நிற்கிறது. ஆகாசம் ஸூர்யனால் கட்டுப்பட்டு நிலைத்திருக்கிறது. 12 ஆதித்யர்களும் யாகத்தால் தரித்து நிற்கிறார்கள். ஸோமலதை (கொடி) ஸ்வர்கத்தை அண்டியிருக்கிறது. (இவைகளைப்போல் இவ்வண்டி நமக்குக் கட்டுப்பட்டு நிற்கவேண்டும்.)
வண்டியில் மாடுகளைப் பூட்ட மந்த்ரம் (7ம் கண்டம்) :-
யுஞ்ஜந்திப்ரத்நம் :- நன்கு செல்லக்கூடியதும், ஸ்தாவர வஸ்துக்களான சாலைகள், பாதைகளைக் கடந்து செல்லக்கூடியதுமான பெரிய குதிரையையோ, காளையையோ ஆகாசத்தில் நக்ஷத்திரங்கள் தெரியும்வரை வண்டியில் கட்டி ஓட்டுகின்றனர். 
யோகே யோகே :- (இது 4ம் கண்டத்தைச் சேர்ந்தது) வண்டியில் காளையையோ, குதிரையையோ பூட்டும் ஒவ்வொரு ஸமயத்திலும், துரிதமாகச் செல்லவேண்டிய இடத்திற்குச் செல்ல இந்த்ரனின் அநுக்ரஹத்திற்கு ப்ரார்த்திக்கிறோம். (எந்த காரியத்திலும் இடையூறு ஏற்படாமல் இருக்க இந்த்ரனை ப்ரார்த்தித்து அவரது அநுமதியைப் பெற்றே ஆரம்பிக்கிறோம்.)
மணப்பெண் வது வண்டியில் ஏறும்போது வரன் சொல்லும் 4 மந்த்ரங்கள்:
1. ஸுகிகும்ஸுகம் :- ஹே கல்யாணி! இலவமரம் கிம்சுக மரங்களால் ஆனதும், பலவித வண்ணங்களை உடையதும், தங்கமயமாய் ப்ரகாசிப்பதும், வேகமாய்ப்போகக்கூடியதும், நல்ல சக்ரமுள்ள இவ்வண்டியில் நீ ஏறு. தீர்காயுளுடன் என்னை விளங்கும்படி உன் தந்தையினால் ஆசீர்வதித்துக் கொடுக்கப்பட்ட சீர் பொருட்களையும் இந்த வண்டியில் ஏற்று. 
2. உதுத்தரம் ஆரோஹந்தி :- (இதை நிச்சயதார்த்த ஸமயததிலும் கூறுவர்) ஓ பெண்ணே! நீ இந்த வண்டியில் ஏறி உன் பகைவர்களை துவம்சம் செய். உன் பதியான என் தலையில் அதாவது சிந்தையில் ஒழிவில்காலமெல்லாம் உடனிரு. விராட் சந்தஸ் பத்து எழுத்துக்களை உடையது, அதுபோல் நீயும் பத்து குழந்தைகளுக்குத் தாயாய் விளங்கு. 
3. ஸம்ராஜ்ஞீ :- மாமனார், மாமியார், நாத்தனார் மற்றும் மைத்துனர்களுக்கு யஜமானியாக விளங்கு. (அவர்கள் அனைத்துத் தேவைகளையும் நீ பூர்த்திசெய்து அவர்களை உன் பாசவலையில் கட்டிப்போடு.)
4. ஸ்நுஷாணாம் :- என்வீட்டிலுள்ள மற்ற மாட்டுப் பெண்கள் (மாற்றுப் பெண்கள்), மாமனாரின் ஸஹோதரர்கள், மற்றவர்கள், வீட்டின் செல்வம், கணவன், மைத்துனர், மற்றும் அனைவருக்கும் யஜமானியாக விளங்குவாயாக. 
புதிதாக ஒரு வீட்டிற்குச் செல்லும் பெண்ணுக்கு அங்கு நம்முடைய நிலை எப்படி இருக்குமோ என்ற ஒரு பயமும், கவலையும் இருக்கும். நிச்சயதார்த்தத்திலேயே அந்த கவலை நீங்கும்படியாக வேதத்தாலேயே உறுதியளிக்கப்படுகிறது. 'நீதான் அங்கு எல்லாம், உன்னிஷ்டம்தான், நீ வைத்ததுதான் சட்டம்" என்றெல்லாம் புதுப் பெண்ணிற்கு தைரியம் வழங்கப்படுகிறது. (இந்தக் காலத்தில் இந்த தைரியம் வழங்கப்படவேண்டியவர்கள் மாமனார், மாமியார்தான் என்பது வேறு விஷயம்.)
குறிப்பு:- மாட்டுப்பெண், நாட்டுப்பெண், மறுமகள் என பல பெயர்களில் அழைக்கிறார்கள். இவைகளில் மறுமகள் என்பதே சரியானதாகும். மகள் ஸ்தானத்திற்கு மாறி வந்தவள் அல்லது மறுவி வந்தவள் என்பது பொருள். இதே பொருளில்தான் 'மாற்றுப் பெண்" - பெண்ணுக்கு மாற்று என்ற பொருளில் சொல்லப்பட்டு வந்தது பின்னாளில் மறுவி 'மாட்டுப்பெண்" என்றாகியுள்ளது. 'மாடு" என்ற வார்த்தை இடம் பெறுவதால் அது சற்று தரம் தாழ்ந்ததாகக் கருதப்பபட்டு அதை 'நாட்டுப் பெண்" என திரித்துக் கூறியிருக்கவேண்டும். 'மாடு" என்ற சொல்லுக்குச் 'செல்வம்" என்ற பொருளும் உண்டு. 'வேதத்தை அந்தணர் மாடு" என்பர். 

வண்டிப்பாதையில் வர்ண நூல்களைப் பரப்ப மந்த்ரம்:
நீலலோஹிதே :- வண்டி செல்லும் பாதையில் விரிக்கப்பட்ட நூல்களில் ஒன்று நீல வண்ணத்திலும், மற்றொன்று சிவப்பு வண்ணமாயும் இருக்கின்றன. நம்மிருவருக்கும் நமது நெருங்கிய உறவினர்களுக்கும் இடையே வேற்றுமையை, பகைமையை ஏற்படும்படியாக நம் பகைவர்களால் ஏவப்பட்ட துர்தேவதைகள் இதனால் நாசமாகட்டும். (இந்த மந்திரத்தால் ஜபிக்கப்பட்ட வண்ண நூல்களைத் தாண்டி அந்த துர்தேவதைகளால் இவர்களைத் தொடர இயலாது.)
வண்டியில் பயணம் செய்ய 3 மந்த்ரங்கள்:
யேவத்வத்சந்த்ரம் :- இந்த வதுவின் தந்தையினால் அளிக்கப்பட்ட சீர் தனங்களை திருடிச் செல்ல முயலும் யக்ஷ;மரோகம் போன்ற திருடர்களை, தேவதைகள் அவர்களின் இருப்பிடத்திற்கே திருப்பி விரட்டியடிக்கட்டும். 
2. மாவிதந் :- வழியில் பகைவர்களோ, திருடர்களோ வந்து துன்பம் தராமல், வழக்கமாக கொடிய பாதையாக இருந்தாலும் இன்று அவை நல்ல பாதையாக எங்களுக்கு அமையவேண்டும்.
3. ஸுகம்பந்தாநம் :- எவ்வழியில் சென்றால் திருடர்களாலும், பகைவர்களாலும் துன்பம் நேராதோ, என்னுடைய வாகனததிற்கும் எந்தக் கேடும் விளையாதோ, அந்த நல்ல வழியை தேவதைகளின் அருளினால் இன்று நான் அடையப்பெற்றேன்.

புண்ணிய தீர்த்தம் நாற்சந்திகளைத் தாண்டும்போது சொல்லவேண்டிய மந்த்ரம்:
தாமந்த ஸாநா :- அச்விநீ தேவர்களே! எல்லோராலும் துதிக்கப்பெறுபவரான உம்மை நானும் துதிக்கிறேன். என் துதியினால் உள்ளம் உவந்து, இந்த பாதையில் எங்களுக்கு நல்ல தீர்த்தத்தை வழங்கி, பத்து புத்திரர்களையும் ஆசீர்வதியுங்கள். இந்த வழியில் எங்களை துன்புறுத்தும் திருடர்கள் மற்றும் வழியை அடைக்கும்படியாகக் கிடக்கும் மரங்கள் போன்றவைகளையும் விலக்கி அருளுங்கள்.
வழியில் நதி போன்றவற்நைக் கடக்க ஓடத்தில் ஏறவேண்டியிருந்தால் அதைத் தொட்டு ஜபிக்க வேண்டிய மந்த்ரம்:
அயந்நோ மஹ்யா: :- இந்த மர ஓடம் எங்களை நல்லபடியாக அக்கரை சேரும்படிச் செய்யவேண்டும். ஏ நதி தேவதையே! நீயும் எங்களுக்கு உதவிகரமாக இருந்து எங்களுக்கு, ஆயுளும், நல்ல தோற்றமும் கிடைக்கும்படிச் செய்வாயாக.
அஸ்யாரே :- நல்லபடியாக அக்கரை வந்து சேர்ந்த நமக்கு இந்த்ரன் எல்லா நன்மைகளும் கிட்டும்படி ஆசீர்வதிக்கட்டும்.

ஸ்மாஸனம் (இடு/சுடு காடு) இவைகளைக் கடக்க நேர்ந்தால் செய்யவேண்டிய 7 ஹோம மந்த்ரங்கள்:
1. யத்ருதேசித் :- அரக்கு, பிசின்களைக் கொண்டு உடைந்த பொருட்களை ஒட்டவைக்கும் ஸாமர்த்தியம் உள்ள இந்த்ரன் அவையின்றியே விரைவாக அந்த காரியத்தைச் செய்ய அவருக்கு ஹோமம்.
2. இடாமக்நே :- (இது 4ம் காண்டத்தைச் சேர்ந்த மந்த்ரம்) ஏ அக்நி தேவனே! அன்னம், பசுக்கள் இவற்றை வெகுகாலம் இருக்கும்படியாக அநுக்ரஹியும். என்மீது இரக்கம் வைத்து, நிறைய புத்திரர்கள் ஏற்படும்படியாகச் செய்யவேண்டும்.
3. இமம்மே வருண, 4. தத்வாயாமி, 5. துவந்நோ அக்நே, 6. ஸத்வந்நோ அக்நே, 7. துவமக்நே இவைகளுக்கான அர்த்தம் முன்பே (உபநயனத்தில்) சொல்லப்பட்டுள்ளது.
பாலுள்ள மற்றும் புனிதமான மரங்களைக் கடக்கும்போது சொல்லவேண்டிய மந்த்ரம்:
யே கந்தர்வா :- எந்த கந்தர்வர்களும், தேவலோகத்து கன்னிகைகளும் இந்த மரங்களில் வஸிக்கின்றனரோ அவர்கள் இவளை மங்களகரமானவளாக விளங்கச் செய்யவேண்டும். இவளுக்கும், இவளால் எடுத்துச்செல்லப்படும் ஸ்த்ரீதனம் எனப்படும் பிறந்தவீட்டுச் சீருக்கும் எந்தக் கேடும் ஏற்படாதிருக்கவேண்டும். 
யா ஓஷதயோ :- ஏ புதுமணப் பெண்ணே! மூலிகைகள், நதி, பாலைவனம் மற்றும் அவைகளுக்கான தேவதைகள் எவை உண்டோ அவைகள் உனக்கு ஸந்ததிகளை அநுக்ரஹித்து பாபங்களைப் போக்கட்டும். 
தன் வீட்டை புது மனைவிக்குக் காட்டும்போது சொல்லவேண்டிய மந்த்ரம்:
ஸங்காசயாமி :- இவளால் கொண்டுவரப்பட்ட சீரும், என் வீட்டில் முன்பே உள்ள தனமும் சேர்ந்துள்ள இந்த என் வீட்டை, இவள் பார்க்கும் முன், இவளது பார்வையில் ஸ்ரீமஹாலக்ஷ;மி கடாக்ஷம் உண்டாகட்டும். இவளால் பார்க்கப்படும் அனைத்துச் செல்வங்களும் மேன்மேலும் பல்கிப் பெருகவேண்டும். திருமணத்தின்போது, உறவினர்களாலும், நண்பர்களாலும் கொடுக்கப்பட்ட நகைகள், உடைகள், பரிசுப்பொருட்கள் யாவும், ஸவிதா தேவனின் அருளால் என் ஸஹோதரர்கள் உள்ளிட்ட என் வீட்டில் உள்ள அனைவருக்கும் நன்மையை மட்டும் விளைவிப்பவையாக விளங்கட்டும்.
வண்டி மாடுகளை அவிழ்த்துவிட மந்த்ரம்:
ஆவாமகந் :- ஹவிஸாலும், ஸ்தோத்ரங்களாலும் பூஜிக்கப்படும் அச்விநீ தேவர்களே! நாங்கள் வந்து சேரவேண்டிய இடத்தைச் சேர்ந்துவிட்டபடியால், உங்களுடைய அநுக்ரஹம் எங்கள்பால் நிறைவாக இருப்பதை உணர்கிறோம். இதுபோலவே நாங்கள் அக்நிதேவனுடைய முழுமையான அருளுக்குப் பாத்திரர்களாகி என்றும் நலமுடன் வாழ்ந்திருக்கவேண்டும்.
அயந்நோ தேவ: :- இந்த வண்டியை இழுத்து வந்த காளைகளே! ஸூர்யன், ப்ருஹஸ்பதி, இந்த்ரன், அக்நி, மித்ரன், வருணன், த்வஷ்டா, விஷ்ணு ஆகிய தேவர்கள் உங்களை நல்லவிதமாக விடுவிக்கவேண்டும். அந்த தேவதைகளின் அநுக்ரஹத்தால் நீங்கள் ஸந்ததிகளுடன் வாழ்வாங்கு வாழவேண்டும். 
காளை மாட்டுத் தோலைப் பரப்பி, அதன்மீது, வதூ அவள் வலது காலை வைத்து ப்ரவேசிக்கச் செய்யும்போது சொல்லவேண்டிய மந்த்ரம்:
1. சர்மவர்மாதமாஹர :- சுகத்தைத் தரவல்ல இந்தத் தோலை இவளுக்காக விரிக்கக் கொண்டுவாருங்கள். சதுர்தசீயோடு ஸம்பந்தமுள்ள அமாவாசை திதிக்கு அபிமானி தேவதையே! இவளுக்கு ஸந்ததிகள் உண்டாகட்டும். இவளுக்கு பக தேவனின் அநுக்ரஹமும் இருக்கட்டும்.
2. க்ருஹான் பத்ரான் :- நான் என் கணவரின் வீட்டிற்குள் முதன் முதலாக நுழைகிறேன். இது மனதைக் கவர்வதாயும், மங்களகரமாகவும் இருக்கின்றது. இதில் வஸிப்பவர்கள் நல்லிதயம் கொண்டவர்களாய் திகழ்கின்றனர். இவ்வீடு, வாரிசுகளை துன்புறுத்தாததாயும், மைத்துனர்கள் அவர்களது வாரிசுகளோடும் நிறைந்து கலகலப்பாய் இருக்கின்றது. நன்கு கவனித்துக் காப்பாற்றுபவர்களைக் கொண்டிருக்கிறது. அன்னங்கள் நிறைந்திருக்கின்றன. விருந்தினர்களுக்கு மிக உயர்ந்த நெய் தாராளமாகச் சொரியும்படியாக இருக்கின்றது. இப்படிப்பட்ட நல்ல வீட்டில் நானும் நல்ல மனம் உள்ளவளாக இன்று ப்ரவேசித்து அமருகிறேன்.
க்ருஹப்ரவேச ஹோம மந்த்ரங்கள்:
1. ஆகந்கோஷ்டம் : எனது மனைவி சீர் வரிசை, பசு, குதிரைகளுடன் என்வீட்டை அடைந்துவிட்டாள். அவள் தீர்க்க ஸுமங்கலியாகவும், ஸ்வர்கத்துக்கு காரணர்களாக விளங்கும் ஸந்ததிகளை உண்டுபண்ணக் கூடியவளாகவும், ஸ்ரீமதி (கணவனைப் பிரியாதவளாயும்) ஆகவும் இந்த ஒளபாஸன அக்நியை ஆராதிக்கவேண்டும். ஹே அக்நி தேவனே! இந்தப் பலன்களுக்காக நான் இந்த ஆஜ்யத்தை உமக்கு ஆஹாரமாக (ஹோமமாகத்) தருகிறேன்.
2. அயமக்நி: க்ருஹத்தின் பாதுகாவலரும், நன்மையை விளைவிப்பவரும், தனங்கள், தான்யங்களை பெருக்குகிறவருமான இந்த ஒளபாஸந அக்நி பகவானைப் போல் எங்களுக்கும் எல்லா செல்வங்களும் பெருகட்டும். (பகன் மட்டுமல்ல எலலா தேவதைகளுமே அக்நி உபாஸனையால் நன்மையை அடைந்தனர்).
3. ப்ரஜயாஆப்யாம் :- ஓ ப்ரஜாபதியே! இந்திர அக்நி தேவதைகளே! இந்த தம்பதிகளின் ஸந்திப்பின் பொருட்டு  நாங்கள் அகாலமரணத்துக்கு ஆளாகி துன்பப்படாமல் இருக்கும்படி அநுக்ரஹியுங்கள்.
4. தேநபூதேந : ஓ இந்த்ர, அக்நி தேவதைகளே! என்னுடைய இந்த ஆஹ{தியை பெற்றுக்கொண்டு, என்னை பலவகையிலும் வளர்ச்சியடையச் செய்யுங்கள். எனக்கு எந்தப் பெண்ணை மனைவியாக அருளினீர்களோ, இந்த ஹோமத்தால் த்ருப்தியடைந்தவரான நீங்கள் அவளையும் அநுக்ரஹித்து வளர்ச்சியடையச்செய்யுங்கள்.
5. அபிவர்த்ததாம் :- ஓ அக்நி தேவனே! எல்லா வகையிலும் இவளும் நானும் முழுமை பெற்றவர்களாக விளங்கவேண்டும். நாங்கள் பலரை பாதுகாப்பவர்கள் என்ற நிலையில் இருக்கவேண்டுமே அல்லாது எதற்காகவும் பிறர் தயவை எதிர்பார்க்கும் நிலை எங்களுக்கு ஒருபோதும் ஏற்படக்கூடாது.
6. இஹைவஸ்தம் :- இந்த தம்பதிகள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியாதவர்களாக பரமஆயுசு எனப்படும் 116 ஆண்டுகள் வாழவேண்டும். இந்த்ரன் இந்த தம்பதிகளின் க்ஷேமத்திற்கு பொருப்பேற்கவேண்டும். (நம்மை காப்பதில் இந்த்ரன் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும்.)
7. த்ருவைதி :- ஹே வதுவே! நீ என்னுடன் திடமான, மாறாத பற்றுள்ளவளாக இருக்கவேண்டும். ப்ருஹஸ்பதி தேவன் உன்னை எனக்குக் கொடுத்திருக்கிறார். நீ என்னுடன் புத்திர பாக்யத்துடன் 100 வருடங்கள் ஜீவித்திருக்கவேண்டும்.
8. த்வஷ்டா ஜாயாம் :- த்வஷ்டா தேவன் இவளை எனக்குத் தந்தார், அவவே என்னை உன் கணவனாக்கினார். அவரே நம் இருவருக்கும் தனத்தையும், தீர்க்காயுளையும் ஏற்படுத்தட்டும்.
9 முதல் 13 வரை :- இமம்மே, தத்வாயாமி, த்வந்நோ, ஸத்வந்நோ, த்வமக்நே இவை உபநயனத்தில்
9ம் கண்டம்
விரிக்கப்பட்ட கானைத் தோலின் மேல் தம்பதிகள் உட்காருவதற்கான மந்த்ரம். கணவன் வடபுறமும், மனைவி தென்புறமுமாய் அமரவேண்டும்.
இஹகாவ: - ஓ பசுக்களே! நீங்கள் எங்கள் வீட்டில் வாழவேண்டும்! குதிரைகளே! நீங்களும் எங்கள் வீட்டில் வாழவேண்டும். ஓ ஸேவகர்களே! நீங்கள் எங்கள் வீட்டில் பணிபுரிவீர்களாக. இந்த வீட்டில் விசேஷமான தானங்கள் செய்வதன் மூலம் செல்வங்கள் நன்கு பெருகட்டும். அதற்கு எல்லா தேவதைகளும் ஆசீர்வதிக்கட்டும்.
பெண்ணின் மடியில் ஒரு சிறுவனை உட்காரச் செய்ய மந்த்ரம்:
ஸோமேநாதித்யா: :- தேவர்கள் சந்த்ரனால் பலன் பெற்றிருக்கின்றனர். (ஸோமன் ஓஷதிகள் எனும் மருத்துவ குணமுள்ள தாவரங்களுக்கு அதிபதி. ஓஷதிகளால் யாகங்கள் நடந்து அதனால் தேவர்கள் த்ருப்தி அடைகின்றனர்). சந்த்ரனால் (மரங்களுக்கு ஸோமன் எனும் சந்த்ரனே காரணமாய் இருப்பதால்) பூமி உறுதியாயிருக்கிறது. இப்படிப்பட்ட சிறப்புக்களை உடைய சந்தரன் எப்படி நக்ஷத்ர மண்டலத்தின் மத்தியில் ஸ்தாபிக்கப் பட்டிருக்கிறனானோ, அப்படியாக இந்தச் சிறுவன் உன் அமடியில் அமரச் செய்யப்பட்டிருக்கிறான்.
சிறுவனுக்கு பழம் அளிப்பதற்கான மந்த்ரம்:
ப்ரஸ்வஸ்த்த: ஏ பழங்களே! நீங்கள் ஸந்ததி வ்ருத்திக்கு காரகர்கள். (பழங்களின் கொட்டைகள் நடப்படுவதால் பயிர்கள், தாவரங்கள் பெருகுகின்றன). இந்தப் பெண்ணும் நல்ல புத்திரர்களை பெறவேண்டும்.
பெண்ணிடம் கணவன் அவள் தன்னிடம் எப்படி இருக்கவேண்டும் என்றும் தான் எப்படி அவளிடம் இருப்பான் என்றும் கூறும் மந்த்ரம்:
இஹப்ரியம் :- அன்புக்குரியவளே! உனக்கு இங்கு நல்ல வாரிசுகள் ஏற்பட்டு, அதனால் ஏற்படும் ஆனந்தத்தை அநுபவிக்க உனக்கு தேவதைகளின் ப்ரஸாதம் கிட்டட்;டும். (நிச்சயதார்த்தத்தில் கூறப்பட்டதுபோல்) இந்த வீட்டிற்கு எஜமானியாக ஜாக்கிரதையாக இரு. நாம் இருவரும் வெகு காலம் - ஸுகங்களை அநுபவித்துக்கொண்டு, உன் ஸந்ததிகளுக்கும் நாம் செய்த யாகாதி தர்மகாரியங்களை போதிப்பாயாக.
ஸுமங்கலீரியம் :- பெரியோர்களே! நீங்கள் தத்தம் இல்லங்களுக்குச் செல்வதற்கு முன், இவளிடம் வந்து தனம், தான்யம், ஸந்தானம், தீர்காயுள் போன்றவற்றை ஆசீர்வதித்துச் செல்வீர்களாக.
கணவன் மனைவிக்கு துருவ நக்ஷத்திரத்தைக் காட்டும் மந்த்ரம்:
த்ருவக்ஷிதி: :- ஓ த்ருவனே! நீர் அழிவற்ற சிரஞ்ஜீவித் தன்மையை அடைந்து இதர நக்ஷத்திரங்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறீர். மற்ற நக்ஷத்திரங்களுக்கு நீர் அச்சாணி போல் திகழ்கிறீர். பூமியில் பதித்த கொம்பில் கட்டப்பட்ட மாடு ஒரு எல்லையைத் தாண்டி செல்ல இயலாததுபோல, நக்ஷத்திரங்களும் விபரீதமான எல்லைகளுக்கு விலகிச் சென்றுவிடாமல் வழிநடத்துகிறீர் அப்படிப்பட்ட மஹிமை வாய்ந்தவரான நீர் என் பகைவர்களிடமிருந்து எம்மைக் காப்பாற்றுவீராக.
அருந்ததி நக்ஷத்திரத்தைக் காட்ட மந்த்ரம்:
கச்யபர், அத்ரி, பாரத்வாஜர், விச்வாமித்ரர், கௌதமர், ஜமதக்நி, வஸிஷ்டர் ஆகிய ஏழு பேரும் ஸப்த ரிஷிகள் என்று போற்றப்படுகின்றனர். இவர்களுடைய மனைவிமார்கள் எழுவருக்குமாகச் சேர்ந்து 'க்ருத்திகைகள்" என்று பெயர். அவர்களில் வசிஷ்டரின் தர்மபத்நியான அருந்ததீ தேவி, பதிவிரதை தன்மையில் சிறந்தவர். (ஸப்தபதியில் 'மநோஹமஸ்மி வாக்த்வம்" என்ற மந்த்ரம் நான் மனம் - நீ வாக்கு என்கிறது. மனம் எதை நினைக்கிறதோ, அந்த நினைக்கும் நேரத்திலேயே வாக்கு அதைப் பேசுகிறது. அதுபோல் கணவனின் எண்ண ஓட்டத்திற்கு மாறுதல் இன்றி சிந்தனை, செயல்பாடு இரண்டும் ஒன்றான  தம்பதிகளாய் விளங்கும் பத்நிக்கு பதிவ்ரதை என்ற அடைமொழி பொருந்தும்).
ஸப்தருஷய: ப்ரதமாம் :- க்ருத்திகை தேவிகளுக்குள் முக்யமானவளாக அருந்ததி தேவி எப்படிப் புகழ் அடைந்திருக்கிறாளோ, அப்படி இந்த என் மனைவியும் விசேஷமாக பதிவ்ரதை என்று பெயரெடுத்து, எட்டாவது க்ருத்திகா தேவி ஸ்தானத்தைப் பெற்று, அதனால் நானும் எட்டாவது ருஷியாக உயர்வடைய வேண்டும். 
உபாகர்மாவில் 'ஸதஸஸ்பதிம் தர்ப்பயர்மி" என்றும், அஷ்ட வ்ரதம் பண்ணும்போது ஒவ்வொரு வ்ரதத்தின் கடைசீ ஹோமமாக 'ஸதஸஸ்பதிம் அத்புதம்" என்று பண்ணப்படும் ஸதஸஸ்பதி மந்த்ரம்:
ஸதஸஸ்பதிம் :- விசித்ரமான சக்தி வாய்ந்தவரும், இந்த்ரனுக்கு நெருக்கமானவரும், அனைவராலும் தங்களது விருப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்ள துதிக்கப்படுபவரும், யாகங்கள் நடக்குமிடங்களுக்கு  அதிபதியுமான ஸதஸஸ்பதி தேவனை தனத்தையும், மேதாவிலாசத்தையும் கொடுக்கும்படி யாசிக்கிறேன். 
அக்நியில் ஸமித்தைச் சேர்ப்பதற்கான மந்த்ரம்:
உத்தீப்யஸ்வ : உலகில் தோன்றிய அனைத்தையும் அறியும் அக்நி தேவனே! எனக்கு தொல்லைகளாக இருக்கக்கூடியவைகளை (பகைவன், பாபம்) வேரறுத்து வீழ்த்துவீராக. எனக்கு பசுக்களைத் தாரும். பத்து திசைகளிலும் தொழில்புரியும் வாய்ப்பைத் தாரும். (எந்த திசையில் சென்றாலும் வருமானத்திற்கு குறைவு ஏற்படக்கூடாது). 
மாநோஹிகும்ஸீத் :- ஓ ஜாதவேதஸ் தேவதையேக்ஷ எங்களது பசு, குதிரை, பிள்ளைகள், வேலையாட்கள் யாரையும் துன்புறுத்தவேண்டாம். மற்ற தேவதைகளுக்கு வழங்கப்படும் ஹவிஸ் ஆஹாரத்தைச் சுமந்து செல்லும் உமது தொழிலைச் சற்று நிறுத்திவிட்டு, உமக்காக நான் கொடுக்கும் இந்த ஹவிஸ் ஆஹாரத்தை ஏற்றுக்கொண்டு எனக்கு எல்லா நலன்களையும் அருள்வீராக.
கல்யாணம் ஆன முதல் மூன்று நாட்களிலும் தம்பதிகள் இரவில் தரையில் பாயை விரித்து ஒரே படுக்கையில் ஒருவரை ஒருவர் தொட்டுக்கொள்ளாமல் படுத்துறங்கவேண்டும். அவர்கள் இருவருக்கும் இடையில் அரசு, அத்தி அல்லது ஆல மரத்தின் குச்சி ஒன்றை சந்தனம் பூசி, வஸ்த்ரத்தால் அலங்கரித்து, அதில் விச்வாஸு கந்தர்வனை த்யானம் செய்து ஆவாஹனம் செய்ய வேண்டும். நான்காம் நாள் இரவு, மூன்றாம் ஜாமத்தில் (நள்ளிரவுக்குப் பின்) அந்த கந்தர்வனை எழுப்பி வெளியேற்றவேண்டும். 
10ம் கண்டம்
1. உதீரஷ்வாத: :- ஓ விச்வாவஜு கந்தர்வனே! எங்களது படுக்கையினின்றும் எழுந்திருப்பீராக. உம்மை நமஸ்கரித்து ப்ரார்த்திக்கிறோம். நீர் இந்த கன்னியை விட்டு வேறோர் கந்யகையிடம் செல்வீராக. இனி இவளை என்னுடன் சேர்த்து வைப்பீராக. 
2. உதீர்ஷ்வாத: பதிவதீ :- இந்த கன்யை கணவனை அடைந்துவிட்டபடியால், நீர் இந்த சயனத்தினின்றும் வெளியேறும். உம்மை வணங்கி, துதித்து யாசிக்கிறோம். இவளின் தந்தையிடம் கல்யாணமாகாத வேறு பெண் இருந்தால் அவளை அடைவீராக. அப்படிப்பட்டவளை அடையவேண்டும் என்பது உமது நெறி.
ப்ராயச்சித்த ஹோம மந்த்ரம் :-
1. அக்நே ப்ரயச்சித்தே : பலனின்றிப் போன கர்மாவை மீண்டும் பலன்தரும் வகையில் முன்னிருத்தும் ஓ அக்நி தேவனே! (ஏதாவது ஒரு பகுதி சரியாகச் செய்யப்படாததால் எந்தக் கர்மா தகுதியற்றதாகிறதோ, அக்நி தேவதையை ப்ரார்த்திப்பதால் அது சரியாகச் செய்யப்பட்டதாகி உரிய பலனை அளிக்கவல்லதாகிறது.) அந்தணனான நான் காக்கும் கடவுளான உம்மை வேண்டி சரணடைகிறேன். என்னால் கைப்பற்றப்பட்ட இந்தப் பெண்ணிடம் நான் அறியாவண்ணம், எனக்கோ, வாரிசுகளுக்கோ, செல்வத்திற்கோ கெடுதல் செய்யக்கூடிய குறைபாடு (அவலக்ஷணம்) இவளிடம் இருக்குமானால், அவற்றை நீக்கி, இவளது பத்திநித் தன்மையை கெடுக்கும் எண்ணத்துடன் வரும் ஜார புருஷர்களுக்கு அவளது கெடுதல்கள் சென்றடையட்டும்.
மேற்படி ப்ரார்த்தனையையே வாயு, ஸூர்யன், ப்ரஜாபதி ஆகிய தேவதைகளிடமும் ப்ரார்த்தித்து அடுத்து வரும் மூன்று ஹோமங்கள் செய்யப்படுகின்றன.
2. வாயோ ப்ராயச்சித்தே :-
3. ஆதித்ய ப்ராயச்சித்தே :-
4. ப்ரஜாபதே ப்ராயச்சித்தே :-
5. ப்ரஸவச் ச :- இந்த எங்கள் திருமணத்தால் பொறாமை கொண்டவர்கள் யார் எங்களை விரோதிக்கிறார்களோ அல்லது எங்களால் விரோதிக்கப்படுகிறார்களோ அந்தப் பகைவனை இந்த தேவதைகளின் பற்களில் சிக்கவேண்டும்படி ப்ரார்த்திக்கிறோம். உலகில் தீமைகளைக் களையும் தேவதைகளான ப்ரஸவன், பூமி, ருத்ரன், ஜலத்துக்கு அபிமானி தேவதை (வருணன்), க்ருஹ தேவதை, தனம் - பலம் இவற்றின் தேவதை, பக தேவதை, ஆகாயம், நதி, ஸமுத்ரம், ஸரஸ்வான் ஆகிய இந்த தேவதைகளுக்கு இந்த நெய்யை ஆஹாரமாகக் கொடுக்கிறேன்.
6. மதுச் ச :- சித்திரை-வைகாசி வஸந்த ருது, ஆனி ஆடி -க்ரீஷ்ம ருது, ஆவணி புரட்டாசி - வர்ஷ ருது, ஐப்பசி கார்த்திகை - சரத் ருது, மார்கழி தை ஹேமந்த ருது, மாசி பங்குனி சிசிர ருது ஆகிய இந்த 6 ருதுக்களுக்கும் அபிமரி தேவதைகளும் பகைவர்களை நசிக்கச் செய்து நன்மைகளைச் செய்யும் பொருட்டு அவர்களுக்கு இந்த ஆஹாரத்தை அளிக்கிறேன்.
7. சித்தஞ் ச :- அந்தக் கரணம், அதன் க்ரியா சக்தி, அபிப்ராயம் அதன் விஷயம், அத்யாபநம், அத்யயநம், அறிவு, அறியவேண்டியது, நாமங்கள், ரூபங்கள், தர்ச பூர்ணமாஸ யாகங்கள் இவைகளுக்கொல்லாம் உரிய தேவதைகளின் த்ருப்திக்காக இந்த ஹோமம் செய்யப்படுகிறது.
பூஸ்ஸ்வாஹா :- பூலோக, புவர்லோக, ஸ்வர்க லோக  அபிமானி தேவதைகளின் பொருட்டுத் தனித்தனியாக ஹோமம் செய்கிறேன். 
ஓகுஸ்வாஹா :- ப்ரணவத்தின் பொருளான பரமாத்மாவின் பொருட்டு இந்த ஹோமம் செய்கிறேன்.

11ம் கண்டம்
வரனை வதூ பார்க்கும் மந்த்ரம் :
அபச்யந்த்வா :- எனது எண்ணங்களை உணர்ந்தவரும், கர்பாதானம் முதல் உபநயனம் வரை முறைப்படி அனைத்து ஸம்ஸ்காரங்களும் செய்யப்பட்டு த்விஜனாக விளங்குபவரும், அத்யயநத்தின் அங்கமான பிக்ஷhசரணாதி கர்மங்களால் (வேதத்தால் போற்றிக் கூறப்படும் ரிக், யஜுஸ், ஸாமம் என்னும்) அழிவற்ற ஐஸ்வர்யங்களைப் பெற்றவரும், விதிப்படி அத்யயனம் செய்தமையால் கல்வி, கேள்விகளில் நிறைகுடமாய் திகழ்பவருமான உம்மை மனத்தில் நிறுத்துகிறேன். 
பிள்ளைச் செல்வத்தை விரும்புபவரே! என்னிடம் சந்ததியையும், இந்த வீட்டில் பொருட்களையும் வழங்கிக்கொண்டு ('அங்கத் அங்காத் ஸம்பவஸி" எனும் வேத வாக்கியப்படி) ஸந்ததி வாயிலாக மீண்டும் பிறப்பீராக.
வரன் வதுவைப் பார்க்கும் மந்த்ரம் :
அபச்யந்த்வா :- ஹே பெண்ணே! ஒளிபொருந்தியவளும், குழந்தைப் பேற்றை விரும்புகிறவளுமான உன்னை நான் ஆசையோடு பார்க்கிறேன். என் வாலிபத்தை அனுபவித்து என் மூலம் வாரிசுகளைப் பெறுவாயாக.
ஹோமம் செய்து மிகுந்த நெய்யினால் இருவரின் மார்பில் தடவிக்கொள்ள மந்த்ரம் :
ஸமஞ்ஜந்து : எங்கள் இருவருடைய இதயங்களை விச்வேதேவர்கள் நட்புடையவைகளாகச் செய்யட்டும். ஜலத்தின் தேவதைகளும் அதை ஆமோதிக்கட்டும். வாயுவும் அதை ஏற்று ஆசீர்வதிக்கட்டும். ப்ரஹ்மாவுன் தன் ஆசீர்வாதத்தால் எங்களை இணைக்கட்டும். எங்களிருவரையும் உரையாடத் தூண்டும் ஸரஸ்வதீ தேவியானவள், நாங்கள் இருவரும் உல்லாசமாக இருக்கும்போது, அந்த உல்லாசத்தை அதிகரிக்கச்செய்யும் இன்பமயமான வார்த்தைகளை பேசும்படித் தூண்டட்டும்.
மேலும் ஜபிக்கப்படவேண்டிய 6 மந்த்ரங்கள் :
1. ப்ரஜாபதே :- ஓ ப்ரஜாபதி தேவனே! நீர் என் சரீரத்தை அடையவேண்டும். (கர்பத்தில் செலுத்தவேண்டிய உயிரணுக்களை தோற்றுவிக்க). உயிருக்குத் தேவையான கை, கால் போன்ற அங்கங்களைத் தோற்றுவிப்பவரான த்வஷ்டா தேவனே நீரும் என்னுள் ப்ரவேசியும். ஓ இந்த்ர தேவனே, நீர் மித்ரன் போன்ற மற்ற அனைத்து தேவதைகளிடமிருந்தும், பிறக்கவிருக்கும் குழந்தைக்குத் தேவையான அனைத்தையும் வழங்குவதற்காக நீரும் என்னுடைய சரீரத்தினுள் புகுவீராக.
ஓ தேவர்களே! உங்களது ப்ரஸாதத்தால் எங்களுக்கு நிறைய புத்திரர்கள் உண்டாக வேண்டும். 
ஆந:ப்ரஜாம் :- ப்ரஜாபதி என்கிற ப்ரஹ்ம தேவன், நம் இருவருக்கும் வாரிசுகளை ஏற்படுத்தட்டும். அர்யமா தேவன் நாங்கள் இருவரும் கிழத்தன்மை அடையும்வரை ஒருவரை ஒருவர் நேசிப்பவர்களாகச செய்யட்டும். ஏ குணவதியே! எந்தக் குறையும் இல்லாதவளாகி, கணவனான என் வீட்டில் வாழ்வாயாக. எனக்கு ஸுகங்களைத் தருபவளாயும், எனது சுற்றத்தார் மற்றும் நண்பர்களுக்கு நன்மைகளைத் தருபவளாயும் விளங்கவேண்டும்.
தாம் பூஷன் : ஓ பூஷா எனும் தேவனே! எவனிடம் ஆண்கள் தங்கள் வீர்யத்தை விடுகின்றனரோ, (யாரிடத்தில் நான் என் வீர்யத்தைச் செலுத்துகின்றேனோ அந்த என் மனைவியை) அவளை எனக்கு, வாரிசு உருவாக்கும் செயலில் மிகவும் ஒத்துழைத்து நடக்குமாறு தூண்டவும். (எப்படியெனில்) எவள் என் உறவுக்காக தன் பிறப்புறுப்பை நன்கு விரிவடையும்படி செய்துகொள்வாளோ, அவளிடத்தில் வாரிசை எதிர்நோக்கும் எமது ஆணுறுப்பை செலுத்த ஒத்துழைக்கும்படி அவளைத் தூண்டுவீராக.
விவாஹ ப்ரகரணம் முடிவடைந்தது.

No comments:

Post a Comment