4ம் கண்டம்
16 விவாஹ ஹோம மந்த்ரங்கள்
1, 2, 3, 4 : ஸோமாய :- இந்த கந்யகையை முதலில் அடைந்த ஸோமதேவனுக்கு இந்த ஹோமம் செய்கிறேன். இரண்டாவதாக கந்தர்வனுக்கும், மூன்றாவதாக அக்நிக்கும் ஹோமம் செய்கிறேன். (இந்த மூவரும்தான் இவளைக் காப்பாற்றி இந்த வரனுக்குக் கொடுத்துள்ளார்கள்).
4. கந்யலா :- இவள் பிறந்த வீட்டை விட்டு கணவனின் இல்லத்தை அடைவதால் இவன் தன் கந்யை என்ற தீiக்ஷ அதாவது நியமத்திலிருந்து நீங்கிவிட்டாள்.
5. ப்ரேதோமுஞ்சாதி :- இஷ்டங்களை பூர்த்தி செய்து வைக்கும் ஓ இந்த்ர தேவனே! இவளுக்கு அவள் பித்ரு க்ருஹத்திலுள்ள அபிமானங்களை (பற்றுதலை) விடுவிக்கவேண்டும். கணவனாகிய என்னுடைய குலத்தில் பற்றுதல் மிகவேண்டும் (பற்றுதல் இல்லாமல் போய்விடக் கூடாது). இவளுக்கு நல்ல புத்திரர்களும், நல்ல ஸம்பத்துக்களும் வழங்கி இவளை இந்த புக்ககத்தில் மனம் லயித்துப்போகும்படியாகச் செய்வீராக.
6. இமாந்த்வம் :- வேண்டியவர்களின் அனைத்து வேண்டுதலையும் மழை போல் பொழிந்து நிறைவேற்றும் இந்த்ரனே! இவளுக்கு நிறை பிள்ளைச் செல்வங்களை ஆசீர்வதியும். பத்து குழந்தைகளை இவள் பெற்றாலும் 11வதாக (கடைசியாக)ப் பெற்ற குழந்தையிடத்தில் அன்பு செலுத்துவதுபோல் என்னிடம் எப்பொழுதும் இவள் அன்பு செலுத்தவேண்டும்.
7. அக்நிரைது :- ஓ அக்நி மற்றும் வருண தேவர்களே! இந்த பெண்ணிடம் பிறக்கவுள்ள புத்திரர்களுக்கு அபம்ருத்யு எனும் அகால மரணம், துர்மரணம் எதுவும் நேரிட்டுவிடாமல், இவள் எக்காரணம் கொண்டும் புத்ர சோகத்தினால் இவள் கண்ணீர்விட்டு அழும்படியான நிலை இவளுக்கு ஏற்படாமலிருக்க ஆசீர்வதிப்பீர்களாக.
8. இமாம் அக்நி: :- விவாஹ அக்னி இவளை ரக்ஷிக்கட்டும். இவளிடம் பிறக்கும் பிள்ளைகள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்காளக இருக்கட்டும். இவள் மடியில் எப்பொழுதும் ஒரு குழந்தை தவழந்த வண்ணம் இருந்து - அவள் மடியை ஒருபோதும் வெறுமையாக்காமல் இருக்கட்டும். நீண்ட ஆயுளை உடைய அந்தக் குழந்தைகளை தினமும் காலை உறங்கி எழுந்தும் கொஞ்சி உறவாடும்படியான பாக்யத்தைக் கொடும்.
9. மாதே க்ருஹே :- ஹே கல்யாணி! உன் வீட்டில் நள்ளிரவில் அழுகுரல் கேட்கவேண்டாம். அழச் செய்யும் அனைத்து துர்தேவதைகளும் உன்னிடமிருந்து விலகி வேறிடத்திற்குச் செல்லட்டும். தலைவிரி கோலமாய் மார்பிலடித்துக்கொண்டு அழவேண்டிய நிலை உனக்கு எப்போதும் வரவேண்டாம். உன் கணவன், குழந்தைகள் நீண்ட ஆயுளுள்ளவர்களாகவும் அவர்களுடன் காலமெல்லாம் சந்தோஷமாக இருப்பாயாக.
10. த்யௌஸ்தே ப்ருஷ்டம் :- உன் ப்ருஷ்டத்தை (முதுகு, ஆஸனம் ஆகிய பின் பகுதிகள்) ஆகாசம் ரக்ஷிக்கட்டும். உன் இரு துடைகளையும் வாயு ரக்ஷிக்கட்டும். அச்விநீ தேவர்கள் உன் ஸ்தனங்களை (மார்பகங்களை) ரக்ஷிக்கட்டும். உன் குழந்தையை ஸவிதா எனும் சூரிய தேவன் காப்பாற்றட்டும். பிறந்த குழந்தை துணி உடுத்தும் காலம் வரும் வரை ப்ருஹஸபதி தேவன், அச்விநீ தேவர்களும் காப்பாற்றட்டு;ம்.
11. அப்ரஜஸ்தாம் :- உன்னிடம் குழந்தை பெறமுடியாத மலட்டுத்தன்மை இருந்தாலும், உனக்கு பிறந்த குழந்தைக்கு கேடுவிளைவிக்கும் புத்ர தோஷம் இருந்தாலும் மற்ற எந்த பாபகரமான தோஷங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் வாடிய பூவை தலையிலிருந்து எடுத்து எறிவதுபோல் உன் சத்ருக்களாகிய பகைவர்களிடம் எறிகிறேன்.
12. இமம்மே வருண, 13. தத்வாயாமி, 14. தவன்னோ அக்நே, 15. ஸத்வந்நோ அக்நே, 16. துவமக்நே அயாஸி ஆகிய மந்த்ரங்களுக்கான விளக்ககங்கள் உபநயனத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன.
12, 13. இமம்மே வருண, தத்வாயாமி... 'வருண தேவனை ஸ்துதி செய்கிறேன், இதுவரை நான் ப்ரார்தித்த அனைத்தும் விரைவில் நிறைவேற அருள்புரியும் என்று, வருணன் குற்றங்களைப் பொறுத்து, கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றை அவற்றை அனுபவிக்க தீர்காயுளையும் கொடுப்பாராக.
14. த்வந்நோ, 15.ஸத்வந்நோ அக்நே, 16. த்வமக்நே .... 'அக்நிதேவன் மற்ற தேவர்களுக்கு வழங்கப்படும் ஹவிஸ்ஸை சுமந்து செல்பவர், அதனால் அந்த அக்நிதேவன் வருண தேவனை நிர்பந்தித்து என் கோரிக்கைகளை நிறைவேற்றச் செய்யவேண்டும். மேலும் அக்நி பகவாந் எப்போதும் நாங்கள் அளிக்கும் ஹவிசுகளைப் ஏற்றுக்கொண்டு எங்களுக்கு நல்லாசிகள் வழங்கிக்கொண்டிருக்கவேண்டும்.
5ம் கண்டம்
வது பாராங்கல் - அம்மியை மிதிக்கும் 'ஆதிஷ்டேமம்" மந்த்ரத்திற்கு உபநயனத்தில் அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
அஸ்மாரோஹணம்
ஆதிஷ்டேமம் அஸ்மாநம் அஸ்மேவத்வம் ஸ்திராபவ. அபிதிஷ்ட ப்ரதந்யத: ஸஹஸ்வ ப்ரதநாயத:.
'ஹே வதுவே நீ இந்த பாரங்கல்லின் மேல் ஏறி நில். இதனால் அதன் உறுதித்தன்மை உனக்குப் புலனாகும். நீ உறுதியிலும், பொறுமையிலும் இந்த கல்லைப்போல் இருருந்து, உன்னை எதிர்ப்பவர்களிடத்தும், உன் நற்பண்புகளை குலைத்துக் கெடுவழியில் இட்டுச்செல்பவர்களிடத்தும், குடும்பத்துக்கு கேடுவிளைவிக்கும் சத்ருக்களிடத்தும் உறுதி, பொறுமை காத்து வெல்வாயாக. நம்மிருவரிடையே இந்த திருமண பந்தத்தால் ஏற்பட்ட நல்ல நட்பிலும் இந்த உறுதித்தன்மையை காத்துவருவாயாக.
லாஜஹோம் (பொறி இடுதல்)
இந்தப் பொறி இடுதல் என்னும் வழக்கம், அக்கினியின் முன்னால் தம்பதிகள் உட்கார்ந்திருக்க, பெண்ணின் சகோதரன் நெற்பொறியை எடுத்து இரண்டு தடவை பெண்ணின் இரு கைகளிலும் போட வேண்டும். இரு கைகளிலும் ஏந்தி வாங்கிக் கொண்ட அந்தப் பொறியை, மணமகன் மனமகளின் கையைப் பிடித்து அக்கினியில் சேர்ப்பிக்க வேண்டும். இந்த லாஜஹோமம் என்பது சூரியனை உத்தேசித்துச் செய்யப்படுவதாகும். சூரியன் உலகத்தில் முதற் பிரகாசமான கடவுளாகக் கீர்த்தியோடு பிரகாசிப்பதைப் போன்று தன் கணவனும் சகல கீர்த்திகளோடு பிரகாசிக்க வேண்டுமென்ற பெண்ணின் பிரார்த்தனையும், சூரியனோடு இணை பிரியாதிருக்கும் சாயாதேவி போன்று தாமும் ஒற்றுமையாகப் பிரியாது எந்தக் காரியத்தையும் நிறைவேற்ற வேண்டுமென்ற வரனின் ஸங்கல்பமுமாக இந்த ஹோமத்தின் தத்துவம் கூறப்படுகிறது.
மூன்று ஹோமம்.
1. இயம் நாரி ... பொரியினால் ஹோமம் செய்யும் இந்து வது தன் கணவன் நூறு வருடங்கள் ஜீவித்திருக்கும்படி அக்னிதேவனை வேண்டிக்கொள்கிறாள்.
2. அர்யமணம் நுதேவம் ... அர்யம தேவனை பொரியினால் பெண்கள் யாகம் செய்து பயனடைந்துள்ளனர். அதுபோல் இந்த வது அர்யம தேவனுக்கு இந்த பொரிஹோமத்தைக் காணிக்கையாக்கி பித்ருகுலத்திலிருந்து பதிகுலத்திற்கு வந்துள்ள என்னால் இந்தகுலத்திற்கு எல்லா நன்மைகளும் ஏற்படவேண்டும் என ப்ரார்திக்கிறாள்.
3. த்வமர்யமாபவஸி ... 'அக்நி தேவனே ஸோம, கந்தர்வர்களுக்குப் பின் அக்நியாகிய நீர்தான் இந்த பெண்ணை கடைசீயாக ரக்ஷித்து, ஒரு தந்தைபோல் (தாதா) இந்த வரனுக்கு அளித்துள்ளீர். அதவாது இந்தக் கன்னிகையை நீர்தான் இவனுக்கு தானமாகக் கொடுத்துள்ளீர். ஏனெனில் அவர்களது இஹபர அனைத்து நலன்களையும் நீரே நிர்வகிக்கிறீர். நட்ட செடிக்கு நீர்வார்த்து வளர்த்தவருக்கு, பிற்காலத்தில் அவை காய், கனிகளை தருவதுபோல் இவர்கள், பசுவின் பால், நெய் போன்றவற்றால் உம்மை ததித்துத் த்ருப்தி செய்கின்றனர். இனி இவள் இந்த வரனின் குடும்பத்தில் வேரூன்றி இருவரும் ஒத்த மனதுடையவர்களாய் வாழ்க்கை நடத்திட தேவையான அனைத்துச் க்ஷேமங்களையும் அருள்வீராக".
ஒவ்வொரு முறையும் ஹோமம் செய்தவுடன் அக்நியைச் சுற்றி வரும்போது, அக்நிதேவனை துதித்து வேண்டுவது 'துப்யமக்ரே பர்யவஹந் ...." ஹே அக்நி தேவனே! கல்யாணப் பெண்களுக்கு அபிமானி தேவதையான ஸூர்யனின் புத்ரியான ஸூர்யாவை நீர் மணந்திருப்பதால் உலகிலுள்ள அனைத்து கல்யாணப் பெண்களுமே உம்முடைய அநுக்ரஹத்திற்குப் பாத்திரப்பட்டவர்களே! ஆகையால் இந்தக் கன்னிகையை ஸந்ததி அபிவ்ருத்திக்கு ப்ரதிபந்தகமான அதாவது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தோஷமில்லாத பெண்ணாக ஆசீர்வதித்து அநுக்ரஹிப்பீராக.
புந: பத்நீ: :- இவள் நீண்ட ஆயுளை உடையவளாகவும், அழகுள்ளவளாகவும் விளங்கும்படி அநுக்ரஹிக்கவேண்டும். இவளது கணவனாகிய என்னையும் நூறாண்டு வாழ ஆசீர்வதிப்பீராக.
விச்வாத த்வயாவயம் :- ஜலம் ஓடும் கால்வாயை ஆடு மாடுகள் சுலபமாகத் தாண்டுவதுபோல் எங்கள் பகைவர்களால் ஏற்படுத்தப்படும் அனைத்துத் தடைகளையும் உம் அருளால் நாங்கள் சுலபமாக தாண்ட அருள்புரியவேண்டும்.
பெண்ணின் இடுப்பில் கட்டப்பட்ட தர்பக் கயிற்றை அவிழ்க்க மந்த்ரம்:
ப்ரத்வாமுஞ்ஜாமி :- ஹே வதுவே! சற்று முன் ஸவிதா தேவன் உன்னை வருண பாசத்தால் கட்டினார். அதை நான் அவிழ்த்துவிடுகிறேன். நாமிருவரும் பல ஸத்கர்மாக்களை அநுஷ்டித்து ப்ரஹ்மலோகம் அடைவோம்.
இமம் விஷ்யாமி :- நல்லெண்ணத்துடன் ஸவிதா தேவன் உன்னைக் கட்டிய யோக்த்ரம் எனும் தர்பக் கயிற்றை நீக்குகிறேன். என்னோடு உன்னையும் ப்ரஹ்மலோகத்தில் (ப்ரஹ்மானந்தக் கடலில்) ஸுகமாக இருக்கச் செய்கிறேன்.
ஒவ்வொரு ஹோமத்தின் முடிவிலும், அந்த ஹோமத்தில் ஏற்பட்ட பிழைகளைப் பொருத்தருளும்படியும், ஹோமத்தால் கிடைத்த நன்மைகளுக்கு காரணமான அக்நி பகவானை போற்றி நமஸ்கரிக்கும் மந்த்ரம்:
அக்நே நய :- அக்நி பகவானே! செல்வம் மற்றும் நற்கதி அடைதலுக்காக எங்களால் செய்யப்படும் வேள்விகளின் பொருட்களை உரிய தேவதைகளிடத்தில் கொண்டு சேர்த்து எங்களின் மேன்மைக்குக் காரணமாக விளங்கி நல்வழியில் கொண்டு செல்பவரே! நீர் அனைத்து வழிகளையும் அறிந்தவர். மேலும் மேலும் எங்களை நல்வழியிலேயே செலுத்தும். யாம் பெறும் அனைத்து பாக்கியங்களுக்கும் காரணமாக விளங்கும் உமக்கு ப்ரதி உபகாரமாக எம்மிடம் உள்ள எதை அளித்து உம்மை கௌரவிக்க இயலும்?! எனவே எம்மிடம் உள்ளதிலேயே மிகச் சிறந்ததானது 'நம:" என்று சொல்லி உம்மை நமஸ்கரித்தல்தான். ஆகையால் நீர் எம்முடைய நமஸ்காரத்தை மனமுவந்து ஏற்று, எம் குற்றங் குறைகளைப் பொறுத்து, எம்மை ஆசீர்வதிக்கவேண்டும்.
அடுத்து மணமகன் மணமகளை தன் இல்லததிற்கு அழைத்துச் செல்லும் வழியில் சொல்லப்படவேண்டிய மந்த்ர ஜபத்திற்காக பொருள்: