Monday, 25 June 2012

Subhaasubha mantranta bhashyam

Sri:
இன்றைய பதிவில் மந்திரங்களுக்கான நேரடி பொருளுடன் சொந்தக் கருத்துகள் ஏராளமாக இடம்பெற்றுள்ளன. மன்னிக்கவும்.


கூரைப்புடவை வழங்குதல்
குறிப்பு:- கூரை வஸ்த்ரம், கோடி வஸ்த்ரம் என்றால் புதிய துணி என்று பொருள். 
பரித்வா கிர்வணோ கிர: ஏ தேவேந்த்ர தேவனே! எப்படி அனைவரிலும் உயர்ந்தோரான தேவ தேவர்கள் அனைவரும் உம்மைச் சூழ்ந்திருந்து துதிக்கின்றனரோ, அதுபோல் இந்த புதிய புடவையானது இவளது மேனியைச் சூழ்ந்திருந்து இவள் எப்போதும் ஸெளபாக்யம் நிறைந்தவளாக இருக்கவேண்டும் என்று அநுக்ரஹிக்கவேண்டும். பரிசுத்தமான மரகதம் வைரம் போன்றவற்றையும் சாளக்ராம பெருமாளையும் நாம் பட்டு வஸ்திரத்தில் வைத்து பாதுகாப்பதுபோல, மிகவும் பரிசுத்தமான மங்களகரமான இந்த வதுவை வரன் ஒரு புதிய பட்டு வஸ்திரத்தை கொடுத்து வாங்கிக் கொள்கிறான். அந்த வஸ்திரத்தைக் கொடுக்கும்போது இவளை பரிசுத்தம் செய்ய அநுக்ரஹித்த தேவதைகளை 'இந்த வதுவை இந்த பட்டு வஸ்த்ரம் சூழ்ந்திருப்பதுபோல் என்னுடைய ஸ்தோத்திரங்கள் தேவதைகளான உங்களைச் சூழ்ந்திருக்கட்டும், நாங்கள் எப்போதும் க்ஷேமமாக இருக்க அநுக்ரஹியுங்கள்" என்று வேண்டிக்கொண்டு புடவையை வதுவுக்கு ஆசீர்வதித்துக் கொடுக்கிறான்.
திருமாங்கல்ய தாரணம்
பெண் புடவையை உடுத்திக்கொண்டு வந்ததும் 
திருமாங்கல்யம் புஷ்பம் வகையறாவை தாம்பாளத்தில் வைத்து பெரியவர்களிடம் காட்டி அவர்கள் தொட்டு அநுக்ரஹம் செய்வது வழக்கம்.  பின்னர், பெண்ணின் தகப்பனார் மடியில் மணப்பெண்ணைக் கிழக்கு நோக்கி உட்கார வைத்து, மணமகன் மேற்கு நோக்கி இருந்து, 
'மாங்கல்யம் தந்துநா அநேந மம ஜீவன ஹேதுநா கண்டே பத்நாமி சுபகே த்வம் ஜீவ சரதஸ்சதம்"
என்ற ச்லோகத்தினால் மாங்கல்ய சூத்ரம் அணிவிக்கிறான். 
'நான் ஜீவித்திருப்பதற்கு ஹேதுவாக கயிற்றினால் ஆன இந்த மங்கள சூத்திரத்தை உனது கழுத்தில் அணிவிக்கிறேன் நீ நூறாண்டுகள் சுமங்கலியாக வாழ்வாயாக"  என்று வாழ்த்தி அணிவிக்கிறான்.
இந்த மங்களத்தை ரக்ஷித்தருளும்படி பகவான் விஷ்ணு, மதுசூதனன், புண்டரீகாக்ஷன், கருடத்வஜன் என்னும்  திருநாமங்களால் எம்பெருமானை ப்ரார்த்திக்கிறான்.
பெண்ணின் கழுத்தில் தாலி கட்டும் பொழுது மாப்பிள்ளை ஒரு முடிபோடுவதென்றும், பின்னர் மாப்பிள்ளையின் சகோதரி அதாவது பெண்ணின் நாத்தனார் மேலும் இரு முடிகள் போடுவதென்றும் ஸம்பிரதாயம். 
குறிப்பு:- இந்த திருமங்கல்ய தாரணம் செய்வதற்கான மந்த்ரமோ, ப்ரயோகமோ 1950க்கு முன் வெளியான புத்தகங்கள், க்ரந்தங்கள் எதிலும் காணப்படவில்லை. நாச்சியார் திருமொழி - வாரணமாயிரத்திலும் 'மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்" என்றுதான் உள்ளது. 'மாங்கல்யம்" பற்றி எதுவும் இல்லை. அடுத்ததாக வரும் தர்பக் கயிறு கட்டும் ப்ரயோகத்தை அநுஸரித்து, நுகத்தடியின்மீது பரிசுத்திக்காக உபயோகப்படுத்தப்பட்ட தங்க வில்லைகளை கயிற்றில் கோர்த்து கழுத்தில் கட்டும் பழக்கம் பின்னாளில் மாங்கல்யதாரணம் என்ற ஒரு ஸம்ப்ரதாயமாக ஏற்பட்டிருக்கவேண்டும். 

பெண்ணுக்கு யோக்த்ரம் எனும் தர்பக் கயிறு கட்டும் மந்த்ரம்:
ஆசாஸாநா :- (முதல் காண்டம் முதல் ப்ரச்நம்) ஓ அக்னி தேவனே! உம்மை நான் ஆராதிக்கும்போது என்னுடன் இருந்து ஒத்துழைக்கும் இந்த கந்யைகைக்கு, மனஅமைதி, நல்ல பிள்ளைச் செல்வங்கள், தேவையான செல்வம், நிறைந்த அழகு, இல்லறம் நடத்த தேவையான அனைத்து வசதிகளையும் இவள் உம்மிடம் வேண்டுகிறாள். இவைகளை நீர் இவளுக்கு அநுக்ரஹிக்கவேண்டும் என்பதற்கர்கவும், இந்த இல்லற வேள்வியில் இவளை இணைத்து பந்தப்படுத்திக்கொள்வதற்காகவும், இவளை இந்த தர்பக் கயிற்றினால் கட்டுகிறேன்.
நல்ல மனது, குழுந்தைகள், ஐஸ்வர்யம், அழகுள்ள சாPரம் என எண்ணிறந்த ஆசைகளுடன் என்னை அடைந்திருக்கும் இந்த வதுவை அவற்றை அளிக்கவல்ல தேவதைகளின் ஆராதனமான இந்த விவாஹ ஹோமத்திற்காக இந்த தர்பக் கயிற்றினால் சுபமாக கட்டுகிறேன்.
 (இல்லறத்தான் (க்ருஹஸ்தன்) மட்டுமே வேள்விகள் செய்ய அதிகாரம் உள்ளவன் என சாஸ்த்ரம் பகர்வதால், இன்று முதல் என் ஆயுள் உள்ளவரை இவள் என்னுடன் இணைந்து அனைத்து வேள்விகளிலும் பங்கேற்றுப் பெறும் நன்மைகளை இருவரும் சமமாக அநுபவிப்போமாக.) 
பெண்ணை விவாஹ அக்னியின் ஸமீபத்தில் (அக்னிக்கு மேற்கே கணவனுக்கு வலது பக்கத்தில் முதன் முதலாக உட்கார வைக்க (பதவி நாற்காலியில் அமர வைத்தல்) மந்த்ரம்:
பூஷாத்வா இதோநயது ....
ஏ பெண்ணே! இன்றைய விவாஹ கர்மா முடிந்ததும் பூஷா என்னும் தேவனின் அருளாசியுடன் நான் உன்னை என் வீட்டிற்கு உன் கையைப்பற்றி அழைத்துச் செல்வேன். அப்போது முதல் நீ என் வீட்டிற்கு யஜமானியாக விளங்குவாயாக. பின்னர் நாம் செய்யவேண்டிய நற்காரியங்கள் அனைத்திலும் எனக்கு நல் ஆலோசனைகளைக் கூறுவாயாக.
ஏ வதுவே, பூஷா, அச்விநீ முதலிய தேவர்கள் உனக்குத் தேவையான பாதுகாப்பை அளித்து என் க்ருஹத்திற்கு கொண்டுவிடுவார்கள் இன்று முதல் அங்கு நீ என் க்ருஹத்திற்கு ஈ˜;வரியாக ஸர்வ சுதந்திரத்துடன் இருந்துகொண்டு என்னுடன் அனைத்து யாக யஜ்ஞங்களையும் செய்து அனைவருடைய அன்பையும் பெறுவாயாக.
குறிப்பு:- நிச்சயதார்த்த மந்திரத்திலேயே 'மூர்தாநம் பத்யுராரோஹ" என்று என்று வீட்டிற்கு யஜமானியாக விளங்குவாய் என்று சொல்லப்பட்டது இங்கு விவாஹபந்தம் முடிந்ததும் மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. யஜமானி என்றால் தன் அதிகாரத்தால் அனைவரையும் துன்புறுத்தும் உரிமையைப் பெறுவதல்ல! சொத்தைப் பாதுகாத்து விரிவுபடுத்துபவனே யஜமானன். அதுபோல் வீட்டிலுள்ள அனைத்துச் சொந்தங்கள், வேலைக்காரர்கள், செல்லப் ப்ராணிகள் அனைவரிடத்தும் கனிவுடன் நடந்து, அவர்கள் நன்மைக்காகவே எப்போதும் சிந்தித்து அவர்களை மேன்மையடையச் செய்து, அன்பினால் அரவணைத்துச் செல்பவளே சிறந்த யஜமானியாகும்.

ப்ரஹ்மாவை வரிப்பது, அக்னி கார்யத்திற்கு தேவையான பாத்திரங்களை சுத்தி செய்வது போன்ற பூர்வாங்க விவாஹ அக்னி கார்யம் ஆனதும் வரன் வதுவைத் தொட்டுக் கொண்டு சொல்லவேண்டிய மந்த்ரம் பின்வருவது.
கந்யா அபிமந்த்ரணம்
ஸோம ப்ரதம: ....
ஏ பெண்ணே! முதலில் உன்னை ஸோமதேவன் அடைந்தான், இரண்டாவதாக விச்வாசு என்னும் கந்தர்வ தேவன் அடைந்தான், மூன்றாவதாக அக்னி உனக்கு பதியானான். (இம் மூன்று தேவர்களும் முறையே பெண்ணுக்குத் தேவையான குணம், இளமை, அழகு இவற்றை அளித்ததாக வேதம் குறிப்பிடுகிறது).
பிறந்தது முதல் பருவ காலம் வரை ஒரு கன்னிப்பெண்ணுக்கு தேவையான குணம், சாPர லக்ஷ;ணங்களையும், பாதுகாப்பையும், போஷாக்கையும் கொடுக்க முறையே ஸோமன், கந்தர்வன், அக்னி ஆகிய தேவர்களின் அருளால் கிடைக்கப்பெறுகிறது. ஸோமன் (சந்திரன்) குளிர்ந்த மனத்தையும், கந்தர்வன் யௌவனத்தையும் (பருவகால அழகு), அக்னி ஒளிவிடும் ரூபத்தையும் அளித்துவருவதையே நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறாள் என்று கூறுகிறோம்.

ஸோமோததது கந்தர்வாய ....
இவளை முதலில் ஸோமன் அநுக்ரஹித்து கந்தர்வனிடம் கொடுத்தான், கந்தர்வன் பிறகு இவளை அக்னியிடம் ஒப்புவித்தான். இப்போது இந்த அக்னிதேவன் இவளையும், புத்ரஸந்தானத்தையும், பரிபாலிக்கத் தேவையான தனங்களையும் எனக்கு அளிக்கவேண்டுமாய் அக்னிதேவனை ப்ரார்த்திக்கிறேன்.
ஸோமன், கந்தர்வன், அக்னி ஆகிய தேவதைகளை எங்களுக்குத் தேவையான தனங்கள் மற்றும் புத்ர ஸந்தானங்களை அளித்து ஆசீர்வதிக்கும்படி ப்ரார்த்திக்கிறேன்.

குறிப்பு:- இந்த மந்திரம்பற்றி ஒரு ஸ்வாரஸ்யமான சரித்திர ஸம்பவமும், அதை ஒட்டி நாத்திகர்களால் எழுப்பப்படும் அபவாத்திற்கான ஸமாதானத்தையும் இங்கு காண்போம்.
நம் பூர்வாசார்யர்களில் ஒருவரான யாமுனாசாரியர் தன் குருவாகிய மஹாபாஷ்யபட்டருக்காக ஆக்கியாழ்வான் என்பவனை எதிர்த்து வாதிடும்போது, அவன் முன்னே, மறுத்து வாதிட இயலாததான 1. உன் தாய் மலடி அல்லள், 2. மஹாராஜா குற்றமற்றவன், 3. மஹாராணி கற்புக்கரசி என 3வாதங்களை வைத்து இவற்றை மறுத்து வாதிட்டால் நீர் வென்றவராவீர் என்றார். ஆக்கியாழ்வானால் முடியாதபோது, மஹாராணியின் உத்தரவுப்படி தானே அவற்றை மறுத்து நிரூபித்தார். 1. 'ஒருமரம் தோப்பாகாது ஒன்றைப்பெற்றவள் தாயாகாள்" என்ற ஆதார வசனத்தைக் கூறி முதலாவதையும், 2. 'குடிமக்களின் குற்றங்கள் கொற்றவனையே சாரும்" என்ற கூற்றால் இரண்டாவதையும், 3. மேற்படி 'ஸோம: ப்ரதம:" என்கிற மந்திரத்தை ஒரு வாதத்திற்காக எடுத்துக்கொண்டு மஹாராணி கற்புக்கரசி அல்ல என்று வாதிட முடியும் என்றும் நிரூபித்து 'ஆளவந்தார்" என்ற பட்டத்தையும் பாதி ராஜ்யத்தையும் பெற்றார் என்பது சுவையான சரித்திர ஸம்பவம்.
இதே வாதத்தை நாத்திகர்கள் முன்வைத்து, மூவர் மணந்த பெண்ணை நான்காவதாக ஒருவனுக்கு மணம் செய்து வைப்பதாய் ப்ராமணர்கள் ஒரு இழுக்கான ஸம்ப்ரதாயத்தை கையாளுகின்றனர் என்று ப்ரசாரம் செய்கின்றனர். 
ஒரே ஒரு சிறிய நிகழ்ச்சியின் சிறிய பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு பார்த்தால் எதிலும் சரியான நிலைப்பாட்டை எட்ட முடியாது. 

'மாநிலம் சேவடியாக து}நீர் 
வளைநரல் பௌவம் உடுக்கையாக
விசும்பு மெய்யாக, திசைகள் கையாக  
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத்தடக்கிய  
வேதமுதல்வன் என்ப 
தீதறவிளங்கிய திகிரியோனே"
என்றார் பரம்பொருளைப் பாரதம்பாடிய பெருந்தேவனார் நற்றிணையில்.
நாத்திகர் நம் வேதத்தை ஆதாரமாகக் கொள்ளாவிடினும் சங்க இலக்கியத்தை மறுக்கமாட்டார்கள் என்பதால் இதை இங்கு எடுத்துக்கொண்டோம். ஆகாயம், காற்று, தீ, நீர், நிலமாகிய ஐம்பூதங்களும் பரம்பொருளின் அங்கம். மனிதன் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் ஐம்பூதங்களின் கலவை. அக்நி எனும் தீயைப்போலவே, மதியமாகிய ஸோமனும், கந்தர்வனும் பரம்பொருளின் அங்கமே, கந்தர்வ, ஸோமர்களின் கூறுகள் சேர்வதாலேயே இளமங்கை சோபிக்கிறாள் என்ற கருத்தையே அந்த வேத வாக்கியம் புலப்படுத்துகிறதே அன்றி ஸோம, கந்தர்வ, அக்நியாதிகள் விவாஹம் செய்து, பின் விவாஹரத்து செய்து கொண்ட பெண் என்பதல்ல பொருள்.
மேலும் இந்த நாத்திகர்கள் கவலைப்படுவதெல்லாம் பெண்ணின் கற்பைக் கொச்சைப்படுத்துகிறார்கள் இந்த ப்ராஹ்மணர்கள் என்பதுதான். இன்றுவரை சாஸ்த்ரம் கூறுவது, ப்ரயோகம் கூறுவது கந்யை என்று அதாவது பூப்படையாதவள் என்று. பூப்படையாத சிறுமியைத்தான் மூன்று தேவர்களும் தங்கள் அநுக்ரஹத்தால் பூப்படையச் செய்யும் யௌவனத்தை வழங்குகிறார்கள். இதில் கற்பு பற்றி கவலைப்பட ஏதுமில்லை. நாத்திகர்கள் இயற்கையை அர்றிணையாகப் பார்க்கிறார்கள், ஆத்திகர்கள் அவற்றை பல்வேறு தேவதைகளாகப் பார்கிறார்கள். இயற்கையோ, தேவதையோ காரணவஸ்துவுக்கு நன்றி பாராட்டித் துதிப்பது, பொருட்படுத்தாமல் விடுவதைக் காட்டிலும் சாலச்சிறந்ததன்றோ?!

No comments:

Post a Comment